shadow

நம் செல் போனில் காங்கோ மக்களின் இரத்தம்…….

சிப்களின் கனிமத்திற்காக 50 லட்சம் மக்கள் கொல்லப் பட்ட கொடுமை.

மடிக்கணனி, செல்போன் எம். பி 3 யில் பயன்படும் சிப்களில், டான்டலம் என்ற கனிமம் பயன் படுகிறது. மாவாக அரைக்கப்படும் சிலிகா தனிமம் 2000க்கு மேற்பட்ட வேதிப் பொருள்களில் பல படிகளில் மூழ்கி எழுந்து சிப் ஆக உயிர் பெறுகிறது. டான்டலம் அமிலங்களின் அரிப்புக்கு உள்ளகாது. அத்துடன் வெப்பத்தினைத் தாங்கும் குணமும்கொண்டது. இந்த குணங்கள் தாம் சிப் தயாரிக்க மிகவும் அவசியம். டான்டலம் ஆஸ்திரேலியா, பிரேசில்,கனடா, காங்கோ ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. ஆனால் 90 விழுக்காடு காங்கோவிலிருந்துதான் பெறப்படுகிறது. இதனை காங்கோவில் கோல்டான் என்றழைக் கின்றனர். தூய்மைப்படுத்தப் பட்ட ஒரு கிலோகனிமம் உலகச் சந்தையில் 650 அமரிக்க டாலர்க்கு விற்கப்படுகிறது. கணனி, செல்போன், சந்தைத் தேவை கூடக்கூட கோல்டான் என்ற டான்டலத்தின் தேவையும் கூடுகிறது.

உள்நாட்டுப்போரில் 50 ஆண்டுகளுக்குமேல் சிக்கி சீரழியும் காங்கோவில் வறுமையில் வாடும் மக்கள், கோல்டான் கிடைக்கும் கிழக்கு காங்கோவிற்கு இடம் பெயர்கின்றனர். கன்னிகாடுகளை அழித்தும் குரங்குகளை உணவுக்காக வேட்டையாடியும் இந்த சுரங்கத்தொழிலில் ஈடுபடுகின்றனர். அடர்ந்த காட்டு பகுதியில் டான்டாலம் எடுக்கப்படுகிறது. 100மீட்டர் ஆழமான சுரங்கங்களில் வாரக் கணக்கில் இருந்து கனிமம் சேகரிக்கினறனர்..இதில் பெரும் பகுதி சிறுவர்கள்தாம் .சுரங்கங்களில் இறந்து போவோர் பற்றி எந்த கணக்கும் இல்லை.இது கூட பரவாயில்லை.

நல்ல விலை கிடைக்கும் கனிமம் உள்நாட்டு போரில் ஈடுபடுவோர்க்கும், ஊழலில் மூழ்கிகிடக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிய வாய்ப்பாக மாறிவிட்டது.இவர்கள் இந்த மக்களை அடிமைப்படுத்தி சுரங்கத் தொழிலில் சிறுவர்களை ஈடுபடுத்திவருகின்றனர். இம் மக்கள் எடுக்கும் கனிமத்தையும் கொள்ளை யடிக்கின்றனர் உள்நாட்டு போர்க்கான ஆயுதங்கள் வாங்க கோல்டான் பெருமளவில் உதவுகிறது. கணனி, செல் உற்பத்தி செய்யும் வளர்ந்த நாடுகள், காங்கோவின் உள்நாட்டு போரில் இரட்டை வணிகத்தை நடத்துகின்றன.டான்டலம் வாங்கிக்கொண்டு ஆயுதங்களை விற்கின்றன இந்த உள்நாட்டுபோர் முடிவுக்கு வராமல் எண்ணெய் ஊற்றியும் வளர்த்த்துவருகின்றன .இங்கு நடக்கும் போரைத்தடுக்க ஐ.நா அமைதிப்படையையும் நிறுத்தியுள்ளது. ஆனால் இவையெல்லாம் மக்களுக்கு உதவவில்லை. வறுமை வயிற்றைக் கிள்ளும் போது எந்த நியாமும் எடுபடாது போகும். காங்கோ அரசின் சுரங்கத்துறைச் செயலாளர் அரசு அதிகாரி மட்டுமல்ல, அன்னிய தனியார் நிறுவனங்களுக்கும் ஆலோசகராகவும் இருக்கிறார் .இதற்கு அந்நாட்டுச்சட்டம் இடமளிக்கிறது. அரசு எப்படி செயல்படும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.

கிழக்கு காங்கோவில் கிவு, கோமா, வாலிகாலி, பிஸ்ஸி என்ற இடங்களில் இந்த கனிமம் எடுக்கப்படுகிறது. உள்நாட்டு போரில் ஈடுபடும் கெரில்லா படைகளும், காங்கோவின் அண்டைநாடுகளான உகாண்டா, ருவாண்டா, பரோனி போன்ற நாடுகளும் இந்த கனிம கொள்ளையில் பங்குவகிக்கின்றன. அன்னிய செலவாணி கொட்டும் இந்த கனிமமே இம் மக்களை காவு வாங்குகிறது. சந்தை பொருளாதாரம் தன் கொள்ளை லாபத்திற்காக மக்களின் இரத்தம் சிந்துபடுவதைப்பற்றி கவலை கொள்ளாது. ஊழலில் ஊறிப்போன அரசு, லாப வெறியோடு இருக்கும் அண்டை அரசுகள், ஆயுதங்கள் வாங்க பணத்தேவையில் அலையும் உள்நாட்டு போராளிக் குழுக்கள், இவர்களுகடையே சிக்கிக் கொண்டுள்ள வறுமையில் வாடும் மக்கள் தோண்டியெடுக்கும் கனிமத்தினாலேயே பலியாகிறார்கள். .நா வின் அமைதிப்படை இந்த மக்களுக்கு எந்த பாதுகாப்பும் தர முடியவில்லை. இவர்களுக்கிடையே நடக்கும் சண்டையில் மக்கள்தாம் பலியாகின்றனர். பாதுகப்பற்ற வறுமைச்சமூகமாக இவர்களின் இரத்தம்தான் நாம் பயன்படுத்தும் செல்போனில் ஒட்டிக்கொண்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட பகுதிகளில் 15,000- 20,000 மக்கள் இந்த பணியில் இருக்கின்றனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டு தோறும் கற்பழிக்கப்படுகின்றனர். 1999 .ஆண்டு தொடங்கி கடந்த 15 ஆண்டுகளில் 50 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்என்கின்றன இங்கு ஆயவு நடத்தியுள்ள பத்திரிக்கையாளர்கள் (பார்க—www.bloodinmobile).

சந்தை பொருளதாரம் வளங்களைத் திருட அதன் உரிமையாளர்களான மக்களையே பலியிடுகிறது. காங்கோவில் மட்டுமல்ல ஈராக், இந்தோனேசியா, நைஜிரியா, லிபியா, சியாராலியோன் என்று அடுக்கிகொண்டே போகலாம் .அன்னிய செலாவாணிகொட்டும் டாண்டாலம்,உள்ள நாட்டின் ஒரு அமெரிக்க டாலர்க்கு கொடுக்க வேண்டிய காங்கோ பிராங்க் எவ்வளவு தெரியுமா– 4லட்சம் கோடி – 4 டிரில்லியன்என்கிறது செய்திகள்.2006ல் படையெடுத்த உகாண்டா 500 மில்லியன் அளவுக்கு டாண்டாலம் கொள்ளையடித்தது. உகாண்டாதான் கனிமத்தை கடத்தும் பாதையாகும். சந்தைப்போட்டியில் விலையைக் குறைக்க காங்கோமக்கள் இரத்தம் சிந்தட்டும் என்கிறது முதலாளித்துவம். 700கோடி உலகமக்களில் சில லட்சம் குறைந்தால் என உள்ளர்ந்த பொருளாதரம் பேசும். இவர்கள் நாட்டின்ன் ஒருவன் கொல்லப்பட்டால் உலகமே அழிந்தது போனதுபோல் கூச்சல் போடும். கேரள மீனவனர்களைக் கொன்ற இத்தாலியர்கள் கதைதெரிந்ததுதானே. 1991 – 2003 வரை ஈராகில் மருந்து கிடைக்காமல் மரித்துபோன குழந்தைகள் 10 லட்சம். அமெரிக்க சாங்சன் கைங்கரியம். உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. ..நா காங்கோ மக்களின் பசியை போக்க 687 மில்லியன் டாலரை தர ஜி-8 வளர்ந்த நாடுகளிடம் கோரிக்கை வைத்ததுஇவர்கள் தந்தது வெறும் 94 மில்லியன். தஙகளின் வளங்களையும், இரத்ததையும் தந்த மக்களுக்கு கொடுக்கப் பட்டது பசியும் பட்டினியும்தான். டாண்டாலம் எண்ணெய் போல முதலீட்டுச்சொத்தாக மாற்றப்பட்டிருந்தால் காங்கோ உலகில் பணக்கார நாடகியிருக்கும். மடிக்கணணியும், செல்போனும், இந்த நாட்டில் செல்வத்தைக் குவித்திருக்கும்.

இதுபற்றி ஆவணப்படம் தயாரித்திருக்கும் பிராங்க்பௌல்சன் நோக்கியாவின் தலைமை அதிகாரியிடம் டாண்டாலம் பெறப்படும் பாதையைசப்ளைச்செயின்வெளியிடக் கேட்கிறார். டாண்டாலம் எந்த நாட்டிலிருந்து வருகிறது சொல்லமுடியவில்லை என்று பதிலளிக்கிறார்..ஆனால் ஜெர்மனியின் புவியியல் அமைப்பு இதுசாத்தியம் எனகிறது.ஒவ்வொறு புவியியலும் தனித்துவம் கொண்டது.இதனைக்கொண்டு கண்டுபிடிக்கமுடியும் என்கிறது. 100 ஆண்டுகள் கடந்த நோக்கியா முதலில் ரப்பர் காலனிகள் தயாரித்தது காங்கோவில் கிடைத்த ரப்பர்தான். டாண்டாலம் சப்ளைச்செயின். தெரியாது என்ற நோக்கியா அதிகாரியின் பதிலின் உண்மை தன்மையை நாம் தெரிந்துகொள்ளலாம்.

பெல்ஜியத்திடமிருந்து 1960 ல் விடுதலைபெற்ற காங்கோ அமெரிக்காவின் கையில் சிக்கியது.1962 ல் மக்களின் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்ரிக்லூமூம்பா சோவியத் சார்புடையவர் என்பதால் இராணுவத்தால் படுகொலைச்செய்யப்பட்டார். இவருக்குபின் பதவிக்கு வந்த ஜென்ரல் மொபூட்டு சே சே சேகு அமெரிக்க ஆதரவுடன் அண்டை நாடுகளைக்கூட நடுங்வைக்கும் கொடுங்கோல் ஆட்சியை 35ஆண்டுகளுக்குமேல் நடத்தினான் .இவன் ஆட்சியில் 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டனர். ருவாண்டா, உகாண்டா, பரோனி காங்கோமீது போர் தொடுத்தன. இது ஆப்பிரிக்கா போர் என்று அழைக்கப்படுகிறது. போரின் முடிவில் 1998 பதவிக்கு வந்த கபிலா ஒரு ஆண்டு கூட பதவியில் இருக்க முடியவில்லை. மீண்டும் உள்நாட்டு போர் கனிமக்கொள்ளைக்காக தொடர்கிறது டாண்டாலம் மட்டுமல்ல, வைரம், செம்பு, ஆப்பிரிக்காமுழுவதுக்குமான நீர் , அடர்ந்த காடு, என வளம் கொட்டிக்கிடக்கும் நாடு காங்கோ. என்று விடுதலை, என்று உணவு—-கேட்கிறது காங்கோ.

எனது பழைய செல்போனை எடுக்கும்போதெல்லாம் இரத்தத்தை தொடும் உணர்வு. மனம் அழுகிறது.

சா.காந்தி.

Author

pesot

Related Posts

Comments

 1. பன்னீர்    

  நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து எழும் அழுகுரல்
  யாரைப் போய்ச் சேரும்?
  உலகப் பெரும் முதலாளிகளின்
  இலாப வேட்டைக்கு எதிரில் எதுவுமே நிற்க முடியாதுதான்!

  தங்களின் கட்டுரையை வேறு வெகுமக்களின் ஊடகங்களுக்கு
  அனுப்ப முயற்சி செய்யலாம்

  ”கற்பழிப்பு” என்னும் சொல்லுக்கு ”வன் புணர்வு” எனப்
  பயன்படுத்தலாம்!

  கட்டுரையின் இறுதியில் தங்களின் கண்ணீர் துளி முற்றுப்புள்ளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>